Wednesday, April 17, 2013
















Monday, December 17, 2012

கீத கோவிந்தம் (ஜெயதேவர்)


 சகியே; இங்கு கொண்டுவா அவனை
அந்த சபலக்காரனை,
சந்தோஷத்தை பகிர்ந்தளிக்கும் தாராளக்காரனை
காமனின் சிலிர்க்க வைக்கும் கற்பனைகளை

உயிர்ப்பிக்கும் வித்தையறிந்தவனை.
இங்கு கொண்டுவா;
கொடிகளின் ரகசிய மணவறையில்
இருள் கவிந்த வேளையில்
இங்குமங்கும் பார்த்தபடி
அச்சத்தைத் தொலைத்தபடி
நானிருந்தும் சத்தமிட்டு சிரிக்கும் அவன்
நாணம் தரும் வித்தைகளில் முன்னேற
எத்தனை ஆசையெனக்கு.

என் கண்ணனை துய்க்கவிடு
மலர்கள் நிறைந்த
என் பள்ளியறையில் நான் கிடக்க
மெதுவே என்மீது சாயும் அவன்
படபடக்கும் என் இதயத் துடிப்பையும் செவியுறுவான்
பரஸ்பர தழுவலில்
திருத்தப் பிணைப்பாக நம்மை ஒன்றிணைப்பான்
கள்ளூறும் இதழைப் பருக நான் எத்தனிக்க
அவனோ என்னிதழ்களில் தேனெடுப்பான்

களைப்பில் என் இமைகள் கவியும் வேளை
கன்னங்களில் கூசும் முத்தங்களிட்டு
என்னை எழுப்புவான் அவன்.
ஒளிவு மறைவற்ற காதலின் வியர்வையில்
என் உடல் நனைந்திருக்கையில்
என் மனதின் சுகத்தைவிட
மென்மையாய் அவனிருப்பான்.
கூடல் பொழுதின் மென்மகன் அவனை
சுகிக்கவிடு, சகியே!

என் காம இச்சையின்
உயரும் துடிப்பை அவனறிவான்.
கட்டுப்படுத்தவியலா என் ஆனந்தச் சத்தம்
குயிலின் குரலைப் போன்றிருந்து பின்
ஒரு புறாவின் குரலாய்
அடங்கித் தேய்கிறது.
போதுமென்று அவன் எச்சரித்தபோதும்
எனக்குத் தெரியும்
காதல் பாடத்தின் கற்பித்தல் அனைத்தையும்
தாண்டிவிடுவேன் நான்.
அவன் நகக் குறிகளை நான்
கர்வத்துடன் அணிந்துகொள்வேன்
காதலின் சின்னமாக.


”அனுபவங்கள் அறிதல்கள் நித்ய சைதன்ய யதி” புத்தகத்திலிருந்து – மொழியாக்கம் சூத்ரதாரி

Wednesday, November 21, 2012

கண்டடைதல்

கண்டடைதல்


இறைவனே பிரிந்து வளர்ந்து
நேருக்கு நேர் கண்டைடயும் கணம்.

தாயாகவும் சேயாகவும்
நிறைவுறும் தருணம்.

ஒரு சீன ”யின்யான்”
வட்டத்தின் முழுமை

ஏக்கமும் அன்பும்
தங்களை இட்டு நிரம்பும் நொடி

ஆதி உணர்வை ஆடியில்
கண்டு திகைத்து நிற்கிறேன்!!

Friday, November 16, 2012

நிர்வாணம்

 நிர்வாணம்

Blown Out - Nirvana
ஓர் நாள் முடிவுடன் எழுந்தேன்
போதும் இந்த விளையாட்டு என துணிந்தேன்

சான்றோன் என சொன்னவரை அணுகி
”சலித்துவிட்டேன், அர்த்தமற்ற
நகல் எடுக்கும் வாழ்வில் பொருளற்றுவிட்டேன்
இருளில் தடம் தெரியாமல் நிற்கிறேன்.
வாழ்வின் பொருள்தான் என்ன?”
என வினவினேன்.

சற்றே கூர்ந்து பார்த்த அவர் மிரண்டு
அங்கே ஒரு அருகர் இருக்கிறார் அவரிடம் செல்
உனக்கு நிச்சயம் வெளிச்சம் அளிப்பார் என்றார்.

அருகரை தேடி அடைந்தேன்
புத்தரின் அழகில் மென்மையில் நிதானத்தில்
ஒரு கணம் ஸ்தம்பித்தேன்.
அவரிடம் மெதுவாக தீவிரமாக
மீண்டும் அதையே கேட்டேன்
”சான்றோன் வெளிச்சம் அளிப்பீர்கள் என்றான்”
என சொன்னேன்.

மெதுவாக நடந்து கொண்டு
தாமரை மொட்டை விரலில் சுழற்றிக் கொண்டு
மென்மையாக புன்னகைத்து
என்மேல் பார்வையை கவிழ்த்து
“உனக்கு நீயே ஒளியாய் இரு” என்றார்.

அக்கணமே அமர்ந்தேன்
ஆண்டுகள் பல சென்றன.
பேச்சில்லை உரையில்லை
மன இருள் விலகி வெளிச்சம் பரவியது
தெளிவடைந்து ஓர் நாள் மீண்டும்
மெளவுணம் கலைத்தேன்

நன்றியுடன் வணங்கி புத்தரை வினவினேன்
அடுத்து என்ன என்று?
மீண்டும் அழகாக புன்னகைத்து
”ஊதி அணைத்து விடு” என்றார்.
நானும் புன்னகைத்துக் கொண்டேன்.
விடுதலை அடைந்தேன்.

Wednesday, October 24, 2012

சிலப்பதிகாரம்

துறை மேய் வலம்புரி தோய்ந்து மணல் உழுத
தோற்றம் மாய்வான்.

பொறை மலி பூம் புன்னைப் பூ உதிர்ந்து நுண் தாது
போர்க்கும் கானல்.

நிறை மதி வாள் முகத்து நேர் கயல் கண் செய்த

உறை மலி உய்யா நோய் ஊர் சுணங்கு மென் முலையே
தீர்க்கும் போலும்.
-------------------------------------------------------------------------------
காவிரியை நோக்கி பாடும் கானல் வரி பாடல் -- சிலப்பதிகாரம்

கடற்கரையிலே மேய்கின்ற வலம்புரிச் சங்குகள் அம்மணலிலே தோய்ந்து உழுதலால் வருக்கள் (சிறு குழிகள்) ஏற்படும். அவ்வடுக்களை அக்கடற்கரையிலே உள்ள புன்னை மரங்கள் தமது செழுமையான பூக்களில் இருந்து உதிர்ந்த, நுண்ணிய பூந்தாதுக்களால் மூடி மறைக்கும். அத்தகைய கானலிடத்தே நிற்கின்ற இத்தலைவியின் முழுமதி போன்ற ஒளி பொருந்திய முகத்திலே கயல்போன்ற கண்கள் செய்த காம நோயாகிய வடுவினை வேறு மருந்து எதனாலும் போக்க முடியாது. தேமல் படர்ந்த அவளது மென்மையான முலைகள் மட்டுமே அந்நோயைப் போக்கும் சக்தியுடையன போலும். {சங்குகள் செய்த வடுக்களைப் பூந்தாதுக்கள் மூடி மறைக்கலாம். ஆனால் அவள் கண்கள் செய்த நோய் தீர அவள் முலைகள் தலைவன் மார்பிலே தோய்ந்து சூடான ஒற்றடம் பெருவதைத் தவிர வேறு மருந்து இல்லை போலும்}

Tuesday, October 23, 2012

SCIENCE + SPIRITUAL



ஆன்மீகமும் அறிவியலும்



மனிதர்களை இரு வகையினராக பிரிக்கலாம். அறிவியலாளர் மற்றும் ஆன்மிகர் என்று. அறிவியலாளர்கள் வெளியே ”நிரூபிக்கப்படுமாறு” தேடுகிறார்கள். ஆன்மீகர் உள்ளே திருப்தி அடையுமாறு தேடுகிறார்கள். இருவரும் ஒருவரையொருவர் உணர்வு ரீதியாக புரிந்து கொள்பவர்கள். பார்வையை பகிர்ந்து கொள்பவர்கள். அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டே இருப்பவர்கள். உண்மையானவர்கள். உள்ளத்தில் எப்போதும் தீரா தாகத்தைக் கொண்டவர்கள். வாழ்பவர்கள். இவர்களே மனித சிந்தனை வளர்ச்சியில் அடுத்த பரிணாமத்தை முன்வைப்பவர்கள்.

இரு நிலைகளுக்கு இடையில் எப்போதும் பெரும்பான்மையானோர் இருந்து கொண்டிருக்கின்றனர். அவர்களையும் இரண்டாக பிரிக்கலாம். மதவாதிகள் மற்றும் நாத்திகவாதிகள். இவர்கள் எதையும் தேடுவதில்லை. இவர்கள் தற்காலிகமானவர்கள். தனக்கென்று சுயமதிப்பீடு ஏதும் இல்லாதவர்கள். ”சமூக வசதி”யே இவர்களின் இலக்கு. பொதுவாக “நுகர்வோர்” என்று உலகில் அழைக்கப் படுகின்றனர். மதவாதிகள், ஆன்மீகம் வளர்ந்து உறைந்து போன “நிலையங்களில்” (மதங்களில்) தங்கி விடுகின்றனர். ஆன்மீகத்தை எப்போதும் தவறாகவே புரிந்து கொள்பவர்கள். அதனால் மூடநம்பிக்கைகளையும்
, சடங்குகளையும் உற்பத்தி செய்த வண்ணம் இருப்பவர்கள். இவர்களிலிருந்தே தொடர்ந்து ”போலி ஆன்மீகவாதிகளும்” முளைத்து அவர்களை திருப்தி செய்த வண்ணம் இருப்பவர்கள். இந்த வகையினரே மதசண்டைகளுக்கு காரணமானவர்கள்.

நாத்திகம் பேசுவோர்கள் மதவாதிகளை தாக்குவதில் நிறைவு கொள்கின்றனர். ”உலகில் அனைத்து மதங்களும் இல்லாமல் ஆனபின் அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று நாத்திகவாதிகளை கேட்டால் விழிப்பார்கள். அவர்களுக்கு தகர்க்க வேண்டிய பெறும்சுவர் அவர்கள் முன் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த சுவற்றுக்குப் பின்னால் என்ன என்பதற்கு அவர்கள் பார்வை செல்வதே இல்லை. இந்த இருவர்களுக்கும் தேடுதலே இருப்பதில்லை. அடுத்த நகர்வு என்பதே இல்லை. நிலைபெற்றுப் போனவர்கள். தேங்கிய குட்டைகள். நாத்திகர்களுக்கும் மதவாதிகளுக்கும் எதிலும்
அக்கறை இருப்பதில்லை. குழுவாகவே இயங்குபவர்கள் தனித்து இயங்க முடியாதவர்கள்.

Saturday, October 20, 2012

நம் எண்ணம் எப்படியோ அப்படியே நாம்.
நாம் எழுவதெல்லாம் நம் எண்ணத்தாலே.
உலகை உருவாக்குவதும் நம் எண்ணங்கள் தான்.
தூய்மை இல்லாமனதுடன்
பேசினாலும் செயல்பட்டாலும்
உன்னை துன்பங்கள் பின்தொடரும்,
வண்டி இழுக்கும் எருதை சக்கரம் தொடர்வது போல.

WE ARE WHAT WE THINK.
ALL THAT WE ARE ARISES WITH OUR THOUGHTS.
WITH OUR THOUGHTS WE MAKE THE WORLD.
SPEAK OR ACT WITH AN IMPURE MIND
AND TROUBLE WILL FOLLOW YOU
AS THE WHEEL FOLLOWS THE OX THAT DRAWS THE CART|


வலிமையற்ற மரத்தை காற்று
எளிதில் சாய்த்துவிடுகிறது.
புலன்களின் மகிழ்ச்சி தேடுதலும்
ஊனிலும் உறக்கத்திலும் நிறைவு கொள்ளலும்
உன்னைச் சாய்த்துவிடும்.

காற்றினால் மலையை புரட்டமுடியாது.
விழிப்புணர்வும் வலிமையையும்
அட்டக்கமும் கொண்டு, விதியை மதித்து
தன்னை ஆள்பவனை ஆசை தொடாது.

HOW EASILY THE WIND OVERTURNS A FRAIL TREE.
SEEK HAPPINESS IN THE SENSES,
INDULGE IN FOOD AND SLEEP,
AND YOU TOO WILL BE UPROOTED.

THE WIND CANNOT OVERTURN A MOUNTAIN.
TEMPTATION CANNOT TOUCH THE MAN
WHO IS AWAKE, STRONG AND HUMBLE,
WHO MASTERS HIMSELF AND MINDS THE LAW.

--புத்தர் (தம்மபதம்)

Search This Blog

Pages

Followers

About Me

My photo
Madurai, Tamilnadu, India
dpaprem@yahoo.com